Saturday, May 13, 2017

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 22

சத்யன் வீட்டுக்குள் வர திரும்பும் போது மான்சி வாசற்படியில் நின்றுகொண்டு ' இது தேவையா என்பது போல் பார்வையால் கேட்க.... " ம்ம் இன்னைக்கே மாற்றம் வரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்த்தனம் மான்சி" என்றபடி குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு ..... " மாட்டுக்கு தண்ணிகாட்டனும்.... இப்போதைக்கு பச்சை தண்ணிதான்... மதியானம் சந்தைக்குப் போய் புண்ணாக்கு பருத்திக் கொட்டை எல்லாம் வாங்கிட்டு வந்துர்றேன்" என்றவன் காளைகளை இழுத்துச்சென்று மரத்தில் கட்டினான்....

பிறகு அவன் எப்போதும் அமரும் பாறையின் அருகே சென்று " மான்சி இங்க வாயேன்" என்று அழைக்க.... யாரையோ யாரோ கூப்பிடுவது போல் அலட்சியமாக நின்றிருந்தாள் மான்சி.... " ஏய் உன்னைத்தான்டி... இங்க வான்னு கூப்பிட்டேன்" என்று சத்யன் உரக்க கத்தவும் ....

" டீயாம்ல டீ " என்று புகைந்தபடி குழந்தையுடன் அவன் கூப்பிட்ட இடத்திற்குப் போனாள்....

பாறைக்கு கீழே அமர்ந்த சத்யன்... அங்கே அடையாளம் போல் வைத்திருந்த சிறு பாறையை நகர்த்தி விட்டு ... மண்ணை தோண்டி உள்ளிருந்து ஒரு டப்பாவை எடுத்து அதை திறந்து குழந்தையின் கொலுசையும் கொடியையும் எடுத்தான்...

மான்சி அவற்றை அடையாளம் தெரிந்து பலத்த அதிர்ச்சியுடன் நிற்க்க... அவள் முன் கையை நீட்டி " அன்னைக்கு நீ ஏழுமலை கிட்ட வித்துட்டு வரச் சொன்னதுதான்.... நானும் அவன்கூட போனேன்.... உன்னோட தோடை விக்க முடிஞ்ச என்னால குழந்தையோட கொலுசு கொடிய விக்க முடியலை.... இது கோபாலோட கடைசி அடையாளம் வேற.... அதான் இதாவது குழந்தைக்கு மிச்சமிருக்கட்டும்னு அன்பு கல்யாணத்துல சண்முகம் எனக்குப் போட்ட மச்சான் மோதிரத்தை வித்து இதையெல்லாம் மறுபடியும் வாங்கிட்டேன்.... வீட்டுல வச்சா அம்மா கண்டுபிடிச்சு ஏதாவது பிரச்சனை வரும்னு இந்த இடத்துல கொண்டு வந்து மறைச்சு வச்சேன்" என்றவன் அவளிடமிருந்து மெய்யரசுவை வாங்கி அதே இடத்தில் அமர்ந்து குழந்தைக்கு போட்டுவிட்டான்....

மான்சியின் கண்ணீரை அடக்க முடியவில்லை... சுயமாய் வாழ நினைத்ததில் தோற்ற உணர்வு கண்ணீரை கொடுத்தாலும்... தகப்பனின் கடைசிப் பரிசு மீண்டும் அவன் மகனிடம் வந்து சேர்ந்ததில் எங்கோ ஒரு மூலையில் சிறு ஆறுதலும் கூட....


கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் மகனை சத்யனிடமிருந்து வாங்கி அணைத்துக் கொண்டு அழுதவளை அணைத்து ஆறுதல் படுத்தமுடியாமல் தனியாத தவித்து நின்றிருந்தான் சத்யன்....

" வேணாம் மான்சி அழாத... மெய்யரசு பயப்படுறான் பாரு" என்று சத்யன் சமாதானம் செய்ய .. குழந்தையும் என்னவென்றே தெரியாமல் மான்சியின் கண்ணீரைத் துடைக்க.... அழுகை அதிகமாகத்தான் ஆனது.... சற்றுப்பொருத்து மான்சியின் கண்ணீர் ஒருவழியாக அடங்கி வீட்டுக்குள் நுழைந்தாள்...

மான்சி குளிக்க செல்வதற்காக துணிகளை எடுத்து தோளில் போட... சத்யன் அவள்முன் கையை நீட்டினான்... அவன் கையில் அரக்கு மஞ்சள் கிழங்கு.... சத்யன் நீட்டியபடியே வழியில் நிற்க.... வெகுநேரம் கழித்து மெல்லிய விசும்பலுடன் அவன் கையிலிருந்த மஞ்சளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள் மான்சி....

குளித்து வந்தவள் சத்யன் கூறாமலேயே நெற்றியில் விரல்கள் நடுங்க பொட்டு வைத்துக் கொண்டாள்.... தோட்டத்திலிருந்த காட்டுப் பூகளில் ஒன்றை கிள்ளி வந்து அள்ளி முடிந்திருந்த கூந்தலுக்குள் சொருகினான் சத்யன்

காலை உணவாக மான்சி கேப்பை களி செய்தாள்...... இருவரும் சாப்பிட்டனர்.... " மான்சி,, மிச்சமிருக்கறத தூக்குவாலில போட்டுக்க... இன்னைக்கு கழனில நிறைய வேலையிருக்கு.... மொதல்ல மாட்டுகளுக்கு கொட்டா கட்டனும்.... நாமனாலும் பரவாயில்லை... நமக்காக உழைக்குற வாயில்லா ஜீவன்.... அதுகளை பாதுகாக்கனும்.... கழனில தேவையான மரத்தை வெட்டிகிட்டு... தென்னங்கீத்து வெட்டி ஓலையா பிண்ணி நாளைக்கே கொட்டகையை ரெடி பண்ணிடலாம்" என்று காற்றுடன் பேசுவது போல் சத்யன் பேசிக்கொண்டே போக.... மான்சியிடமிருந்து " ம்" என்ற வார்த்தை கூட பதிலாக வரவில்லை....

" சொல்றது காதுல விழலையா?" என்று சத்யன் அதட்ட...

" நான் உங்க வயக்காட்டுக்கு வரமாட்டேன்" என்றாள் மான்சி....

அவளை முறைத்த சத்யன் " இதோப்பாரு அததுக்கு உன்னை உட்கார வச்சு விளக்கம் சொல்லிகிட்டு இருக்க முடியாது..... அதுக்கு இப்ப நேரமும் இல்லை .... இதுதான் விதினு வாழ கத்துக்க..... மொதல்ல அது எங்க கழனி இல்லை.... நம்ம கழனி .... சும்மா பேசிகிட்டு இருக்காம கெளம்பு போகலாம்"

சத்யன் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு காளைகளின் கயிற்றை கையில் பிடித்துக் கொண்டு " கிளம்பி வா மான்சி" என்று சொல்லிவிட்டு முன்னால் போக..... மான்சி முறைப்புடன் " பெரிய இவரு? கூப்ட்டவுடனே பின்னாலேயே ஓடனும் போலருக்கு" என்று முனங்கிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு சாப்பாடு இருந்த கூடையை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு சத்யன் பின்னால் போனாள்....

சத்யனின் வயலுக்கு செல்லும் ஒத்தையடிப்பாதை.... முன்னால் காளைகள்... அவற்றின் பின்னால் சத்யன் தோளில் குழந்தையுடன்.... மான்சி தலையில் சாப்பாடு இருந்த கூடையை சுமந்தபடி ..... காளைகளின் கழுத்து மணியின் சத்தத்துக்கு போட்டியாக மான்சியின் கால் சலங்கைகள் ஒலிக்க .... சத்யன் நின்று நின்று ரசித்தபடி சென்றான்....




ரோஜாவுக்கு முள் தான் வேலி என்பது போல்.....

என் காதலுக்கு உன் புன்னகை தான் வேலியா?

உனது புன்னகையை கடந்து சென்று

என் காதலை அனுபவிக்கவும் ஆராதிக்கவும் ..

உன் அனுமதி வேண்டி காத்திருக்கும் நான் ....

என் காதலி என்ற பேரழகியின் பெருமிதப்பை...

பொறுமையாய் ரசிக்க மனம் ஏங்க...

தினமும் வெந்நீர் ஆற்றில் நீந்தும் வேதனையோடு...

என் இரவுப் பொழுதுகளை துடிப்புடன் கழிக்க ....

கண்முன் பறந்து கிடக்கும் வாலிப விருந்தை...

உண்டு ருசி பார்க்கத் துடிக்கும் ....

ஏழை காதலனாய் , தவிப்புடன் நான்.....

உனது மெய்தீண்டா மெய்க் காவலனாக இருக்கும் நான்...

உன் மெய்யோடு எனது மெய் காதல் கலந்து...

உன் மனதுக்குள் மையம் கொள்ளும் நாள் எப்போது?

கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.... சத்யனும் மேற்க்கொண்டு எதுவும் பேசவில்லை ... இருவரும் மவுனமாக வீடு வந்து சேர்ந்தனர் ....


மறுநாள் காலையிலேயே சுகுனா வந்துவிட்டாள்..... விஷயம் ஏதும் அறியாமல் வந்த சுகுனா .... மான்சியை சுமங்கலி கோலத்தில் பார்த்ததும் அதிர்ந்து .. பிறகு வியந்து கண்ணீருடன் மான்சியை கட்டிக்கொண்டாள்....

" நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடலை கண்ணு.... உன்னைய இப்படி பார்க்க மாட்டோமானு எத்தனை நாள் அழுதிருப்பேன் தெரியுமா? எனக்கு ஒரு வார்த்தை தெரியப்படுத்தியிருந்தா ஓடி வந்திருப்பேனேம்மா? " என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்...

மான்சி எதையும் சொல்லமுடியாமல் தவித்து நிற்க... சத்யன் தான் புன்னகையுடன் முன் வந்து சமாளித்தான் " முன்கூட்டி திட்டம் போட்டு எதுவும் நடக்கலைங்க.... இவளை அந்த மாதிரி பாக்க பிடிக்காம நான்தான் அவசர அவசரமா தாலி கட்டினேன்... அதான் யாருக்கும் தகவல் சொல்ல முடியலை.... மான்சிக்கு கூட கடைசி நிமிஷம் வரை எதுவுமே தெரியாது" என்று சத்யன் கூற...


சுகுனா சத்யனைப் பார்த்து வியந்து " அய்யோ ராசாவாட்டம் இருக்கியே தம்பி... மான்சிக்குனே பொறந்தது மாதிரி?? இனி இதுக ரெண்டையும் பத்தின கவலை விட்டுது ... பத்திரமா பாத்துக்க தம்பி" என்றாள்....


சத்யன் சிரிப்புடன் தலையசைத்து " அதைவிட எனக்கு வேறென்ன வேலையிருக்கு அக்கா?" என்றான்...


அன்று மதியம் வரை இருந்துவிட்டு சாப்பிட்டு கிளம்பினாள் சுகுனா..... வாசலில் நின்று " இந்த தம்பிக்கு பயந்து தான் சென்னைல வீடு பார்க்க சொன்னியா மான்சி? என்ன பொண்ணும்மா நீ? நல்லவேளை நான் வர்றதுக்கு முன்னாடியே தம்பி முந்திக்கிச்சு" என்று கூறி சந்தோஷமாக சிரித்து விட்டுப் போனாள்


அடுத்த சில நாட்கள் இப்படித்தான் அமைதியாக போனது... கழனியில் எதிரெதிரே பார்த்துக்கொண்டாலும் சிறு சிறு முனங்கலுடன் இருவரும் விலகி கொண்டனர்... காரணம் சத்யன் தான்... தனது மகனின் நிம்மதி முக்கியமென பூமாத்தாள் அமைதியாக செல்ல.... சத்யனின் மனது காயம்படக் கூடாது என்று மான்சி ஒதுங்கிப் போனாள்.....


எல்லாவற்றையும் விட மான்சியின் அயராத உழைப்பு பூமாத்தாவின் வாயை அடைத்திருந்தது என்று கூட சொல்லலாம்..... சத்யனுடன் சேர்ந்து பாடுபடும் மான்சி கண்டும் காணாதது போல் இருந்தாள்.....

மாடுகளுக்கு கொட்டகை கட்டி முடிந்ததும்... வயலில் வேலை எதுவும் இல்லை எனும் போது .....மான்சியின் மணையோடு பக்கத்திலிருந்த தனது மணையையும் சேர்த்து மலையிலிருந்த சிறு பாறைகளை பொறுக்கி வந்து சுற்றிலும் காம்பவுண்ட் போல் அடுக்கினார்கள் .....

கரண்ட் சர்வீஸ் வாங்குவதற்காக தாலுக்கா ஆபிஸ் சென்றான் சத்யன்.... வீட்டுக்கு மணை பட்டா இருந்தால்தான் தரமுடியும் என்று சொல்லிவிட.... மணை பட்டா கேட்டு விண்ணப்பித்தான்.... அடுத்த மாதம் ஊரக வளர்ச்சித் துறை மந்திரி சுற்றுப் பயணம் வரும் போது இலவச வீட்டு மணைப் பட்டா வழங்குவார்கள் என்று உறுதியாக தெரிந்ததும் நிம்மதி ஏற்ப்பட்டது...

பகலில் நல்ல பொருப்புள்ள குடும்பத் தலைவனாக இருந்தவன்.... இரவில் காதல் நோயாளியாக மான்சியின் கண்சைவுக்காக காத்திருந்தான்..... அவனின் ஏக்கப் பார்வையை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு கதவடைக்கும் மனைவியை ஒரு கை பார்க்கலாமா என்றுதான் தோன்றும்.... ஆனால் அவளுக்குக் கொடுத்த வாக்குறிதி குறுக்கே நின்றது...

இரவில் கொல்லும் விரகம் பகலில் உழைப்பாக மாறியது.... வீட்டுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்கி வந்துப் போட்டான்.... மான்சி ஒரு காதல் மனைவியாக அவனுடன் வாழவில்லை என்றாலும் அவனுக்கு உழைப்பில் சரிபாதியாக நின்றாள்.....

இப்போதெல்லாம் மான்சி எதிரில் கன்டாலே பூமாத்தாவின் பேச்சு இதுவாகத்தான் இருந்தது... " வேண்டாவெறுப்பா புள்ளை பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்ச கதையால்ல இருக்கு? எந்த ஊருல் நடக்கும் இந்த மாதிரி அநியாயம்?..... ஆம்படையான் சம்பாதிச்சுப் போட்டு சொகுசா வாழனும்... ஆனாக்கா ராவான அவனை வெளிய படுக்க விடனும்... இவளுக்கெல்லாம் புருஷன் ஒரு கேடா?" என்று சற்று சத்தமாகவே பேசிக்கொண்டு போனாள்...

சத்யனை காதில் விழும்போது " அவங்க அப்படித்தான் ... நீ கண்டுக்காத" என்பான்... ஆனாலும் மனசுக்குள் ஒரு எதிர்பார்ப்பு.... மான்சியிடம் ஏதாவது மாற்றம் வராதா என்று....

மான்சியால் பதில் பேசவும் முடியவில்லை .... தனது நிலை என்ன என்று அவளுக்கே புரியவில்லை.... சத்யனின் உயர்வுகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து நின்று அவளை பயமுறுத்தியது... இவ்வளவு நல்லவனுக்கு எச்சில் இலையில் படையல் போடுவதா? என்ற தயக்கம் பெருமளவு அவளைத் தடுத்து வைத்திருந்தது...

அன்று காலை கழனியில் வேலை எதுவும் இல்லாததால் வீட்டிலிருந்து தாமதமாக போகலாம் என்று மான்சி நிதானமாக சமையலில் ஈடுபட்டிருக்க... தோட்டத்திலிருந்த பாத்ரூமிலிருந்து வரும் சாக்கடை நீரை வாழைக்கன்றுகளுக்கு போய் சேருவது போல் கால்வாய் வெட்டித் திருப்பிக் கொண்டிருந்தான் சத்யன்...

வெளியே யாரோ அழைக்கும் சப்தம்.... " அண்ணா, அண்ணி....." என்ற அழைப்பைத் தொடர்ந்து யாரோ உரிமையுடன் கதவைத் திறந்து உள்ள வந்தனர்...

சாதத்தை வடித்துவிட்டு யாரென்று நிமிர்ந்துப் பார்த்த மான்சி ஆச்சர்யத்துடன் எழுந்தாள்... அன்பரசிதான் தனது பெரிய வயிற்றை சுமக்க முடியாமல் நின்றிருந்தாள்....

" நானா அண்ணி? என்னையா அண்ணின்னு கூப்பிட்டாங்க?... மான்சி இன்னும் திகைப்பு மாறாமல் நின்றிருந்தாள்....

அன்பரசி வயதில் மான்சியை விட கொஞ்சம் பெரியவள் தான்... சிறியவள் ஆனாலும் அண்ணனுக்கு மனைவியாகி விட்டவளை முறையோடு அழைத்தாள்...

" என்ன பேசமாட்டியா அண்ணி?" என்று அன்பரசி சிரிப்புடன் கூற... அப்போது சண்முகம் உள்ளே வந்தான்... " என்னம்மா நல்லாருக்கியா?" என்றபடி கையிலிருந்த பையை சுவர் ஓரமாக வைத்தான்...

குரல் கேட்டு தோட்டத்திலிருந்து வீட்டுக்குள் வந்த சத்யன் தங்கையை கண்டு முகம் மலர்ந்து " வாம்மா..... நானே இன்னும் ரெண்டு நாள்ல உன்னை வந்து பார்க்கனும்னு நெனைச்சேன்...இத்தனை நாளா கழனில வேலை சரியா இருந்ததும்மா..." என்றான்...

" ஏன் மாப்ள அள்ளி விடுற? புதுப் பொண்டாட்டிய தனியா விட்டுட்டு வர பயந்து வரலைனு சொல்லுப்பா?" என்று கேலி செய்த சண்முகம் " என்ன மருமகன் இன்னும் எழுந்திருக்கலைப் போலருக்கு?" என்றபடி மெய்யன் தூங்கிய தொட்டிலை நெருங்க....

அப்போதுதான் குழந்தையின் ஞாபகம் வந்ததவள் போல் அன்பரசி வேகமாக தொட்டில் அருகே சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனைப் பார்த்து " ஆமால்ல நமக்கு இவன் மருமகன் முறைதான்" என்று சிரித்தாள்...
சத்யன் மான்சியைப் பார்த்து கண்ணசைக்க சட்டென்று சுதாரித்த மான்சி அவசரமாக பாயை எடுத்துப் போட்டு " உட்காருங்க" என்றாள்....

" நான் போய் கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது வாங்கிட்டு வர்றேன் " என்றுவிட்டு சட்டையை எடுத்து மாட்டியவனை தடுத்த சண்முகம் " அதெல்லாம் வேனாம் .... நீ மொதல்ல உட்காரு மாப்ள பேசலாம்...." என்று தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்

" சரி மான்சி மோர் இருந்தா கலந்து குடு" என்று மனைவிக்கு உத்தரவிட்டவன் " என்ன மச்சான் சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்திருக்கீங்க? அதுவும் அன்பையும் கூட்டிக்கிட்டு?" சத்யன் கேட்க...

அன்பரசி மெல்ல எழுந்து மான்சியிடம் போய் " மருமகன் பேர் என்ன அண்ணி?" என்று கேட்க...

தயிரை கடைந்து மோராக்கியபடி புன்னகையுடன் நிமிர்ந்த மான்சி " மெய்யரசு .... அவங்கதான் வச்சாங்க" என்றாள்... அவங்கதான் எனும்போது என்றுமில்லாமல் முகத்தில் மெல்லிய சிவப்பு... நானத்தின் சிவப்பு....

கூடிப்போயிருந்த மான்சியின் அழகை ரசித்தபடி... " பேர் நல்லாருக்கு அண்ணி... அன்பரசி தமிழரசி அடுத்து மெய்யரசு ம்ம் அரச குடும்பம் தான் போல நாமல்லாம்" என்று கூறிவிட்டு சிரிக்க ... மான்சியும் சிரித்தாள்...

இருவரும் இலகுவாக பேச ஆரம்பித்தனர்... மான்சி அன்பரசியின் உடல்நிலைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்...

அவர்களின் பேச்சுக்கு ஒரு காதை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்த சத்யனை கலைத்தான் சண்முகம்....

" என்னா மாப்ள மறந்து போச்சா? அன்புக்கு அடுத்த மாசம் ஒன்பது... வளைகாப்பு செய்யனும்.... நல்லநாள் பார்த்தாச்சு ... அதை சொல்லிட்டு அப்புடியே வளைகாப்புக்கு உங்களையும் அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தோம்" என சண்முகம் சொன்னதும் சத்யனுக்கு சங்கடமாக இருந்தது....

" மாசக் கணக்கை மறந்துட்டேன் மச்சான்... மன்னிச்சுக்கங்க" என்றான்...

" அட விடு மாப்ள இதுக்குப் போய் மன்னிப்பு கேட்டுகிட்டு" என்றவன் " அன்பு தங்கச்சிகிட்ட ஒரு தட்டு வாங்கிட்டு வந்து பூ பழம்லாம் வச்சு குடு" என்று மனைவிக்கு உத்தரவிட்டான்....




மான்சியிடம் ஒரு தட்டை வாங்கிக்கொண்டு வந்த அன்பு கொண்டு வந்த பையிலிருந்த பூ பழம் ஸ்வீட் எல்லாவற்றையும் எடுத்து வைத்து மான்சியிடம் கொண்டு போய் கொடுத்து " அண்ணி ரெண்டு நாள் முன்னாடியே வந்து வளைகாப்புல எல்லாத்தையும் நீதான் செய்யனும்" புன்னகையுடன் கூறினாள்....

மான்சி தட்டை வாங்கிக் கொண்டு கண்ணீர் முட்டிய கண்களுடன் " உங்கம்மாவுக்கு நான் வந்தா புடிக்காது" என்றாள்....

அன்பரசி மான்சியின் கையைப் பற்றிக்கொண்டு " அண்ணி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய் அம்மாகிட்ட விஷயத்தை சொன்னதும் ' அங்கயும் போய் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்கம்மா... அப்புறம் இதுதான் சாக்குனு புருஷனையும் வரவிடாம செய்துடப் போறானு சொன்னாங்க... அதுமட்டுமில்ல? வாங்கிட்டுப் போனதுல கொஞ்சம் மட்டும் எடுத்து வச்சுகிட்டு ' இங்க தின்றதுக்கு எந்த குழந்தை குட்டி இருக்கு? இல்ல நான்தான் பூ வச்சுக்கப் போறேனா? எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய் அங்கயே குடுங்கன்னு சொன்னாங்க தெரியுமா?" அன்பு தனது தாய் கூறியதை ஒன்று விடாமல் கூற....

மான்சியின் கண்கள் குளமானது... பூமாத்தாள் இப்போதெல்லாம் குத்தலாக பேசுவதில்லை என்று மான்சிக்கும் தெரியும்... சிலநாட்கள் பொழுது போன பின்பும் கழனியில் வேலை செய்து கொண்டிருந்தால் " பொழுதே போச்சு .. இனிமே என்நேரம் போய் வீட்டுல சோறாக்குறது?..... சின்ன குழந்தைய வேற வச்சுகிட்டு?.... கழனி என்ன ஓடியாப் போகப் போகுது? மொதல்ல வீட்டுக்கு போய்ச் சேருங்க" என்று யாரிடமோ சொல்வது போல் மறைமுகமாக சொல்வாள் ..... ஆனால் இன்று வீட்டின் விசேசத்திற்கு தன்னையும் அழைக்கச் சொன்னது மான்சியின் நெஞ்சம் நிறைந்து போனது ....

அதன்பிறகு எல்லோரும் சற்றுநேரம் பேசிக்கொண்டிருக்க ... மான்சி தனது சமையலை முடித்திருந்தாள்.... சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று உரிமையுடன் வற்ப்புறுத்தி இருவரையும் சாப்பிட வைத்தாள் மான்சி

அன்பரசி சாப்பிடும் போது கூட மெய்யனை மடியை விட்டு இறக்கவில்லை ... மருமகனே மருமகனே என்று கொஞ்சியபடியே சாப்பிட்டாள்.....

அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் மான்சி இனி யார் என்ற உரிமையை நிலை நாட்டுவதாகவே இருந்தது.... மான்சிக்கு ஏனோ விழிகள் கலங்கியபடியே இருந்தது .....




சண்முகமும் அண்பரசியும் கிளம்பியதும் வழியனுப்புவதற்காக மான்சியும் வாசல் வரை வந்தாள் ....

அன்பரசி மான்சி சற்று ஓரமாக அழைத்துச் சென்று " அண்ணி எனக்கு உங்க மனசு புரியுது.... ஆனா ஊருக்குப் புரியாதே அண்ணி... பலரும் பலவிதமா பேசுறாங்கன்னு அம்மா அழுவுறாங்க அண்ணி.... இப்படி பலரும் பாக்குற மாதிரி அண்ணனை வெளியப் படுக்க விடாதீங்க அண்ணி... என்ன பிரச்சனையா இருந்தாலும் வீட்டுக்குள்ளயே வச்சுக்கனும் .... அதான் புருஷன் பொண்டாட்டிக்கு அழகு அண்ணி.... " என்றவள் மான்சியின் கையைப் பிடித்து அழுத்தி விட்டு " நான் கிளம்புறேன் அண்ணி...." ென்று கணவனுடன் கிளம்பினாள்.....

அவர்கள் போனபின் சத்யன் மட்டும் வயலுக்கு கிளம்ப மான்சி குழந்தையுடன் வீட்டிலேயே நின்றுவிட்டாள்..... அன்பரசியின் வார்த்தைகள் அவன் நெஞ்சுக்குள் ரேஸ் குதிரையைப் போல், ஓடிக்கொண்டிருந்தது .....

காமாட்சிப் பாட்டி கூட இரண்டு நாட்களுக்கு முன்பு இதைத்தான் சொன்னாள்.... " பொண்டாட்டிக்கு வாட்ச்மேன் வேலை செய்றான் பூமாத்தா மகன்" என்று மஞ்சுளா ஊரெல்லாம் கேலிப் பேசி திரிவதாக செய்தி வந்ததுதான்...

ஆனாலும் சத்யனை வீட்டுக்குள் அழைப்பதா? மாசற்ற அவனுக்காக கொடுக்க தன்னிடம் என்ன இருக்கு? எந்தமுடிவும் எடுக்க முடியாமல் ஏதோ தடுத்தது.... உருவமில்லாத அந்த ஏதோ ஒன்றுக்காக மான்சி உருக ஆரம்பித்தாள்....

எதிரில் பார்ப்பவர்கள் கூட பூமாத்தா மருமகளே என்ன சௌக்கியமா? எனுமளவுக்கு நடப்பு மாறியிருந்தது....

இப்போ வெளியே படுத்துக்கிறான் சரி? ஆனா இனி வரும் மழைக்காலத்தில் ? ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் படுத்திருந்தாள் மான்சி.....

இப்போதெல்லாம் சத்யன் பார்க்கும் பார்வையே மாறிப் போயிருந்தது.... எப்போதும் பார்வையில் ஒரு தவிப்புடன் கூடிய ஏக்கம்... எதைக் கொடுத்தாலும் விரல் தீண்டாமல் வாங்குவதில்லை.... குளித்துவிட்டு வரும் வரை தோட்டத்து வாசப்படியில் உரிமையுடன் அமர்ந்திருப்பது... பிறகு உடை மாற்றும் போது கூட இவள் முறைத்தப் பிறகு தான் வெளியேறுவது என சத்யன் தனது ஒவ்வொரு செயலிலும் தாபத்தை உணர்த்திக்கொண்டு தான் இருந்தான்....




மான்சியின் தரப்பில்தான் பதில் இல்லாமல் இருந்தது... உள்ளுக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை என்ற சாம்பலை கிளறினால் காதல் எனும் நெருப்பு புகைய ஆரம்பிக்குமோ என்னவோ?....

அன்று மாலை சத்யன் வீட்டுக்கு வரும் போது மணி ஏழாகியிருந்தது .... மறுநாள் நடவுக்காக சோடை ஓட்டிவிட்டு சேறும் சகதியுமாக வந்தான் .

அவன் குளிக்க வேண்டும் என்று சொல்ல.... அடுப்பிலிருந்த வெந்நீரை எடுத்துச் சென்று பாத்ரூமில் ஊற்றினாள் மான்சி......

சத்யன் அதிகமாக வீட்டில் குளிப்பதில்லை.... இதுபோல் வெகுநேரம் கழித்து வரும் போது மட்டும் தான் வீட்டில் குளிப்பான் ... மற்றபடி கழனியிலிருக்கும் கிணற்றில் தான் குளிப்பது வழக்கம்....

சத்யன் உடைகளை கலைந்து டிரவுசருடன் நின்று வெந்நீரை மொண்டு தலையில் கொட்ட.... சூடு தாங்காமல் " ஸ்ஸ்ஸ் யம்மா...... " என்று மெல்லிய குரலில் அலறினான்

வேலையே இல்லாமல் சும்மாவேனும் தோட்டத்தில் நின்றிருந்த மான்சி கொஞ்சம் பதறி வேகமாக வந்து பாத்ரூமுக்குள் நுழைந்து சத்யனைப் பார்க்காமல் சட்டேன்று குனிந்து தண்ணீரில் கைவைத்துப் பார்த்தாள்..... மிதமான சூடுதான்... அதுக்கா இப்படி கத்தினான்?

நிமிர்ந்தவளைப் பார்த்து " அது சூடு சரியாத்தான் இருக்கு ... நான்தான் கத்திட்டேன் போலருக்கு" என்று சத்யன் வழிந்தான்...

மான்சி போகவில்லை நின்று அவனை கவனித்தாள்... உடலில் ஆங்காங்கே சகதி படிந்து கிடந்தது.... சத்யன் சற்று திரும்பி நிற்க.... கொஞ்சம் தயக்கம் ... நிறைய தவிப்புமாக குனிந்து தண்ணீரை எடுத்து அவன் முதுகில் ஊற்றிவிட்டு தனது கையால் சகதியை தேய்த்து கழுவ ஆரம்பித்தாள் ....

அவள் விரல் பட்டதுமே சத்யனுக்கு சிலிர்த்துப் போனது .... மெல்லத் திரும்பி " மான்சி " என்று அழைத்தபடி அவள் கையைப் பற்றி இழுத்து தன்னோடு அணைத்தான்....




நிலவு நீச்சல் பழகும் நீல வானம்... காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்த ஈர இரவு .... உடலும் உடலும் ஒட்டிக்கொள்ள ... இப்போது மான்சியும் சேற்றைப் பூசிக் கொண்டாள்.. வியர்வை கலந்த ஆண்மை வாசனை.....

சத்யன் துனிந்து அவள் முகத்தை நிமிர்த்த.... மான்சி விழித்துக்கொண்டு சத்யனை உதறிவிட்டு உள்ளே ஓடிப் போனாள்...

அன்று இரவு உணவு முடிந்தது.... சத்யனின் ஜாகை திண்ணைக்கு மாறியது... ஆனால் எப்போதும் அடைக்கப்படும் கதவு இன்று திறந்தே கிடந்தது...

அவளாக அழைப்பாள் என்று அவனும்... அவனாக வருவான்,என்று அவளும் காத்திருக்க... அந்த இரவில் காய்ந்த நிலவும் காத்திருந்தது ... அவர்களுக்கு தேன்நிலவாக மாறும் ஆசையில்....


ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க


ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு


ஒரு நாள் பார்க்குமா புது நாத்தோடு சேந்து
தென்காற்று தெம்மாங்கு பாட

இன்னும் நாளாகுமா சின்ன ஆவாரம்பூ
தேன் வேண்டும் வண்டோடு கூட

இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது
பின்பு வாராது இள வயது

மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும்
இது தோதான ஏகாந்த இரவு


ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு


ஒரு மாந்தோப்புத்தான் சிறு மாராப்பு போட்டு
ஆளாகி நாளாகி ஏங்க

ஒரு மாமாங்கமா சின்ன மாமாவைத் தேடி
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க

அந்த மேகங்களும் கொண்ட தாகங்களும்
இன்று தீர்கின்ற பொழுதல்லவா?...

கட்டிக் கொண்டால் என்ன ஒட்டி நின்றால் என்ன
இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது?


ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

No comments:

Post a Comment